மதீனாவில் வாழும் மஹ்மூதரே
ஆக்கம்: முஹிப்புல் உலமா அல்ஹாஜ் A. முஹம்மது மஃரூப் அவர்கள் (துபாய்)
மறைந்தும் மறையாமல்
மறைந்து மதீனாவில்
வாழும் மஹ்மூதரே
என்றும் மறையா மறை தந்து
மறையா புகழ் கண்டு
மறைந்த மா மன்னரே
மனித குலம் வாழ மனிதராய் பிறந்த
மனிதரில் புனிதரே
மண்ணில் மடமை இருளகற்றி
மார்க்க ஒளியேற்றி மகிழ்ந்த நபி நாதரே
1) வானில் ஒளி வீசும் மதியின்
அழகுந்தன் அழகுக்கினையாகுமோ
நபியே அழகுக்கினையாகுமா
வார்த்தை முழுதும் நான் வார்த்து
தொகுத்தாலும் வாழ்த்து நிறைவாகுமா
நபியே வாழ்த்து நிறைவாகுமா
நபிகள் எல்லோரும் நபியே உம் வரவை
நவின்று சென்றார்களே
அன்று நாயன் ரஹ்மானை நபியே
உம் பின்னே நின்று தொழுதார்களே
2) கனவில் எனைக் கண்டோர் எனையே
கண்டார்கள் என்று உரைத்தீர்களே
நபியே அன்று உரைத்தீர்களே
கருணை முகமதுவை கனவில்
நான் காண இன்று வருவீர்களே
நபியே இன்று வருவீர்களே
உம்மி நபி உங்கள் உம்மத்தான
எனை அன்று சுவனத்திலே
உங்கள் அருகில் அமர வைத்து
உவகை கொண்டிடவே உதவி செய்வீர்களே
3) மண்ணறை சென்ற பின்னரும்
நானும் உங்கள் புகழ் பாடனும்
மன்னர் நபி நீங்கள் எந்தன் அருகமர்ந்து
களிப்புடன் கேட்கனும்
நபியே களிப்புடன் கேட்கனும்
முத்து நபி உங்கள் முத்தம் என் நுதலில்
பதிந்திடும் நேரமே
அங்கு முன்கர் நகீரும் கேள்வி கேட்காமல்
நின்று விட வேண்டுமே